- டேனியல் ராமசாமி, அவரின் நாலாம் மனைவியான சின்னத்தாய் அம்மாவிற்கும் நான்கு மகன்கள்.வரதராஜன், பாஸ்கர், ராசைய்யா மற்றும் அமர்சிங்.அமர்சிங் கங்கை அமரன் ஆனார், ராசையா இளையராஜா ஆனார்.
- சினிமாவிற்கு பின் ராசையா இளையராஜா ஆனது அனைவரும் அறிந்தது.ஆனால் சினிமாவில் சேருவதற்கு முன் டேனியல் ராசையா என்றே அழைக்கப்பட்டார்.
-
- இசைக்கருவி இல்லாமல் தாளம் போட்டு வாய்ப்பு பெற்ற ராசையாவினை என்ன பெயரில் அறிமுகம் செய்யலாம் எனக்கேட்க பாவலர் பிரதர்ஸ் என்றார் இசைஞானி. இது சற்று பழையதாய் உள்ளது என்று யோசித்த இயக்குனர் திரு.பஞ்சு அருணாச்சலம் வைத்த பெயரே இளையராஜா.
- தனது பூஜை அறையில் எத்தனை தெய்வங்களின் புகைப்படங்கள் இருந்தாலும் அனைத்திற்கும் நடுவில் உள்ள தனது அன்னையின் புகைப்படத்தினை கும்பிட்டுவிட்டே தனது பணியை தொடங்குவார் இசைஞானி.
- ஆர்மோனியம் இல்லாமல் சிந்தித்தபடியே ட்யூன் போடுவது இந்தியாவில் இசைஞானி ஒருவரால் மட்டுமே முடியும்.
- யாருடன் பேசினாலும் கை குலுக்க மாட்டார் இசைஞானி அவர்கள்.
- கதை, கவிதை , கட்டுரை எழுதுவதும் , பென்சில் ட்ராயிங் வரைவதும் , தான் பிடித்த புகைப்படங்களை ப்ரேம் செய்து தன் வீட்டில் மாட்டுவது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு
- இவரை வாடா , போடா என்று உரிமையுடன் அழைப்பவர்கள் திரு.பாரதிராஜா, திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் இசையமைப்பாளர் திரு.ஜி.கே.வெங்கடேஷ் அவர்கள்.
- சிபாரிசு சுத்தமாக பிடிக்காது.ஆனால் ஒரே முறை சிபாரிசு கருதி திரு.சங்கிலிமுருகனுக்கு கால்ஷீட் தந்தார்.சிபாரிசு செய்தவரின் பெயர் சின்னத்தாய் அம்மாள்.
- சிறு வயதில் இருந்தே தனது இசைத்தோழனாக அவர் கருதுவது மதுரை பொன்னையா அவர்கள் செய்து தந்த அவரின் ஆர்மோனியப்பெட்டியே
- இளையராஜா மட்டும்தான் எனக்கு போட்டி என கருதிய இசைமேதை ஒருவர்,அவரின் இசை உணர்ந்து இசைஞானி அவரின் பாதம் தொட்டு வணங்கியபோது உண்மையை உணர்ந்தார்.அந்த இசைமேதை மெல்லிசை மன்னர் உயர்திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.
- அன்னையின் மீது அவர் பாசம் அதிகம். சின்னத்தாய் அம்மாள் சென்னை வந்தார் ராசய்யாவின் வீட்டிலே தான் தங்குவார். காரணம் கேட்டதற்கு "ராஜா இன்னும் குழந்தையாவே இருக்கான். அவன் காலையிலேயே வேலைக்கு போகும்போது நான் போய் டாட்டா காட்டனும். சாயங்காலம் அவன் வரும்போது நான் இங்க இருக்கனும்" என நெகிழ்ச்சியாய் சொன்னார்.
- அம்மா என்றழைக்காத உயிரில்லையே , சின்னத்தாய் அவள் தங்க ராசாவே, என அவரின் அன்னைப்பாசம் பாடும் பாடல்கள் நிதர்சனத்திலும் நிதர்சனம்சின்னத்தாய் அம்மாள் இறந்தபின்பு மீளாத துயர் அடைந்த இளையராஜா அவர்கள் .என் தாயென்னும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே.என்று எழுதிப்பாடினார்.
- எத்தனை பட்டங்கள் பெற்றாலும் எத்தனை விருதுகள் பெற்றாலும் மேஸ்ட்ரோ, இசைஞானி என்று புனைப்பெயரிட்டு அழைத்தாலும் பண்ணைபுரத்துக்காரர் என்பதே எனக்கு பெருமை என்பார் இசைஞானி.
- பண்ணைபுரத்தில் ஒரு இடம் வாங்கி அதில் அவர் சின்னத்தாய் அம்மாளின் இறப்பிற்கு பிறகு அங்கு ஒரு கோவில் எழுப்பினார். அங்கு அமர்ந்து தியானம் செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
- ராசைய்யாவின் அமைதியும் அவரிடம் இருந்த அர்ப்பணிப்பையும் கண்டுதான் எனது மகள் ஜீவாவை அவருக்கு கட்டி வைத்தோம் என்பார் இசைஞானியின் சகோதரியான கமலாம்பாள் அவர்கள்.
- இசையமைப்பதற்கு இசை முறையாக கற்க வேண்டும் என்பதால் தங்களிடம் இருந்த ஆம்ப்ளிபயரை அடகு வைத்து வெஸ்டர்ன் , க்ளாசிக்கல் என இசை பயின்றார் இளையராஜா. ஆனால் அந்த ஆம்ப்ளிபயரை திரும்ப மீட்டெடுக்க சென்றபொழுது அந்த இடத்தில் வேறொரு கடை இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டார் இசைஞானி.
- அன்னக்கிளி படத்திற்காக அவர் தேர்வானபொழுது எதிர்த்த அனைவருக்கும் பதிலடி தர இயக்குனர் பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி படப்பாடல்களை இசையமைத்து காட்டு என கூற, அங்கிருந்த திருமண மண்டபத்திலேயே அத்தனை பாடல்களுக்கு இசையமைத்து தனது திறமையை நிரூபித்தார் இளையராஜா.
- சிறுவயதில் கடலைக்காட்டுக்கு காவல் காத்தபடியே பாட்டுப்பாடுவாராம் இந்த இசைஞானி.காவலுக்கு காவலும் ஆச்சு, சங்கீதமும் சந்தோசமா ஆச்சு.
- இளையராஜா இசையமைத்தால் தான் படம் தயாரிப்பேன் , படம் நடிப்பேன் என்பார் இயக்குனர் ராஜ்கிரண். ஒரு தருணத்தில் அவர் நடித்த படத்தில் தன்னால் இசையமைக்க முடியாத நிலையில் நீ நடிக்கனும், மத்தவங்களுக்கும் வாய்ப்பு தரலாம் என இசைஞானி கேட்டுக்கொண்ட பின்னரே ராஜ்கிரண் மற்றவர்கள் இசையமைக்கும் படத்தில் நடித்தார்.
- இத்தனை வெற்றி பெற்ற ராஜா அவர்கள் இசையமைத்த முதல் படம் பாதியிலேயே நின்று போனது.அந்த படத்தின் தயாரிப்பாளர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.
- உங்களின் மாஸ்டர்பீஸ் என எதைக்கருதுவீர்கள் என நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இசைஞானியின் பதில். கார்த்திக்,பவதாரிணி, யுவன் ஆகியோரே எனது சிறந்த மாஸ்டர்பீஸ் படைப்புகள்.
- மிகவும் உயர்ந்த இசை இதுவரை நாம் கேட்காத இசையே ஆகும். இதுதான் இசை குறித்து இசைஞானி அவர்கள் கூறுவது.
- கவிஞர் கண்ணதாசனால் திரையுலகத்தில் இசையமைக்க தொடங்கிய இளையராஜா தான் கண்ணதாசன் அவர்களின் கடைசி பாடலுக்கும் இசையமைத்தார். ஒரு வித சோகத்துடன்.
குறிப்புகள் உதவி , நன்றி : கிருஷ்ணா கிட்டு